×

திருப்போரூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மது வாங்க முயன்றவர்கள் கைது: ஒருவருக்கு வலை, ரூ.2 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மது வாங்க முயன்ற 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (47). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நாவலூரில் உள்ள மதுபானக்கடைக்கு, தனது ஷேர் ஆட்டோவில் சென்று மது வாங்கினார். அப்போது, லோகநாதன், டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணத்தை கொடுத்துள்ளார்.

இப்பணத்தை வாங்கிய ஊழியருக்கு, ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாஸ்மாக் கடை ஊழியர், லோகநாதனிடம் இது கள்ளநோட்டு மாதிரி இருக்கிறது என கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த லோகநாதன் ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால், டாஸ்மாக் கடை ஊழியர்கள் இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு ஆட்டோவை எடுக்க வந்த லோகநாதனை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குற்றவாளி லோகநாதன் கொடுத்த தகவலின்பேரில், கூட்டாளியான ஈசிஆர் உத்தண்டி பகுதியை சேர்ந்த எபினேசனை (43) கைது செய்தனர்.

இதனையடுத்து எபினேசன், லோகநாதன் ஆகியோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதும், இந்த கள்ளநோட்டுகளை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது வாங்க முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட எபினேசன், லோகநாதன் ஆகியோரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த (500 தாள்) ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குபதிந்து ஜெயகாந்தனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருப்போரூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மது வாங்க முயன்றவர்கள் கைது: ஒருவருக்கு வலை, ரூ.2 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Tiruporur ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை